Vidiyal

விடியல்

SYNOPSIS of ‘The Dawn’: It was his first day at Bhumi’s Kanini project. The volunteer starts conversing with a child, intending to motivate him; However, he’s disappointed when the child narrates an incident of having to drain out stagnated rainwater at his school, at the cost of his math exam! The volunteer, feeling demotivated, begins to question his ability and the need to make a real difference in a society filled with such distress! He then remembers Eragon’s (from the novel of the same name) answer to why people should keep fighting against all odds; the answer fills him with delight and hope of a new dawn!

பூமி இயக்கத்தில் சேர்ந்த புதிது. கணினி வகுப்பு எடுப்பதற்கு முன் சுற்றங்களின்றி தனிமையில் வாழும் அந்த சின்னஞ்சிறு சிறுவர்களோடு பேசி, முதலில் அவர்களைப் புரிந்துகொள்வோம் என்றும் அவர்களுக்கு படிப்பில் நம்பிக்கை ஊட்டும் வகையில் உற்சாகப்படுத்திப் பேசுவோம் என்றும் எனக்குள் எழுந்த எண்ணோட்டத்தின் விளைவாய் இதோ, ஒரு சிறுவனோடு பேசிய உரையாடல்:

“பெரியவன் ஆகி என்ன பண்ணப் போற?”

“டாக்டர் ஆகப் போறேன். எல்லாருக்கும் உதவி செய்வேன்” (அவனது நம்பிக்கையை உணர்ந்தேன் )

“டாக்டர் ஆகனும்னா நல்லா படிக்கனும். நல்லா மார்க் வாங்கனும். உன்னால முடியும். உனக்கு என்ன ஹெல்ப் வேணுமுன்னாலும் எங்ககிட்ட கேட்கலாம். டீச்சர்ட்ட கேக்கலாம். சரியா?!”. பையன் தலையை ஆட்டினான். (நல்ல புத்திசாலி)

“கணக்குப் பரீட்சையில எவ்வளவு மார்க் வாங்கின?”

“ஃபெயில் னா” (தலையை குனிந்தான்)

“டேய்.. நீ நல்லாப் படிக்கிற பையன்தானே, அப்புறம் என்னடா? இப்படி படிச்சா எப்படி டாக்டர் ஆவ?”

“இல்லைன்னா, அது வந்து. ஸ்கூல்ல மழைத்தண்ணீ நிறைய தேங்கி இருந்துச்சு. பரீச்சை அன்னிக்கு காலையில மண் அள்ளிப் போட்டேம். அதான் எழுத முடியலைன்னா” (ஏமாற்றம்)

“பரவால்ல.. நல்லாப் படி!”

நம்பிக்கை ஊட்ட சென்ற நான் நம்பிக்கை இழந்தேன். இவர்களுக்கு எப்படி நம்பிக்கை தருவது? பொய்யான நம்பிக்கையால் இவர்கள் அல்லவா மனக் கஷ்டப்படுவார்கள்!. இப்படியே விட்டுவிட்டால் இருப்பதை வைத்தாவது சந்தோஷப்படுவார்களே!!

கல்வியின் முக்கியத்துவம் இங்கு எல்லோருக்கு தெரியும். ஆனாலும் எல்லோருக்கும் சமமான, தரமான கல்வி வெறும் கதைப் பேச்சுதானா?! கனவுதானா?!

மாற்றம் என்பது வெறும் ஏமாற்றம் தானா?! எதையுமே மாற்ற முடியாமல், கடைசியில் தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொள்வதுதான் மாற்றமா?

குழப்பத்தின் ஒவ்வொரு படிக்கட்டுகளாய் இறங்கியதில், நம்பிக்கை அதல பாதாளத்தில்!

வாய்ப்பே இல்லாத வியப்புகளை நம்புவது வீண். என்னால் யாரையும் ஏமாற்ற முடியாது. என்னால் எதையும் மாற்ற முடியாது! குழப்பத்தின் குழிக்குள் விழுந்த நான் படுக்கையில் தூக்கத்தைத் தேடினேன்.

எரகான் (ERAGON) புத்தகம் ஞாபகம் வந்தது. அதில் எரகானுக்குள் ஒரு கேள்வி எழும்:

“அரசன் கொடியவன்; அவனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் அவனுக்கு எதிரான போரில், மக்கள் அதைவிட அதிகமாய் அவதிப் படுகிறார்களே! வெற்றி வாய்ப்பும் குறைவு. அப்புறம் எதற்காக போராட்டம் செய்கிறாய்? அப்படியே விட்டு விட்டால், மக்கள் கொஞ்சமாவது நிம்மதியாய் இருப்பார்களே!”

இந்தக் கேள்விக்கு இறுதியாய், ஒரு சரியான பதில் கிடைத்துவிடும்:

“கொடிய அரசனால் பாதிப்படைவது இந்த தலைமுறை மட்டுமல்ல; அடுத்தடுத்த தலைமுறைகளும் பாதிப்படையும். எதிர்கால தலைமுறைக்காக போராட வேண்டியது முக்கியம்!”

தெளிவு பிறந்தது!

ஆதரவற்றவர்களுக்கு தரப்படும் நம்பிக்கையும் கனவும், அடுத்த தலைமுறையிலாவது நிச்சயமாய் நடக்கும்! இருளாய் இருக்கிறது என்று கண்களை மூடிக்கொள்ள முடியாது.

விளக்குகளை ஏற்றி வைப்போம்! விடியாமலா போய்விடும்!!

நாளைய விருட்சம், இன்றைய விதையில்!

நாளைய மாற்றம், இன்றைய கனவில்! இன்றைய உழைப்பில்!

Change Today … Change Tomorrow!

Dinesh (centre) with his kids and team

– Dinesh Kumar N

2 thoughts on “Vidiyal

Leave a Reply

You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


− two = 3